Tuesday, November 13, 2012

விஷம் வைத்து கொலை?: யாசர் அராபத் உடலை தோண்டும் பணி ரமலாவில் துவக்கம்

பாலஸ்தீன விடுதலை இயக்கத்த தலைவர் யாசர் அராபத் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து அவரது உடலைத் தோண்டி எடுக்கும் பணி துவங்கியுள்ளது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்த தலைவர் யாசர் அராபத் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி பாரீஸில் உள்ள பிரான்ஸ் ராணுவ மருத்துவமனையில் தனது 75வது வயதில் இறந்தார். அவரது இறப்புக்கு இது தான் காரணம் என்று பிரான்ஸ் மருத்துவர்களால் தெரிவிக்க முடியவில்லை. ஆனால் அவர் இஸ்ரேலியர்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்றே பல பாலஸ்தீனியர்கள் நம்பினர். இந்நிலையில் அவரது மனைவி சுஹாவிடம் இருந்து அராபத்தின் உயிரியல் மாதிரிகளைப் பெற்று ஆய்வு செய்த சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம் தனது அறிக்கையை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது அராபத் இறக்கும்போது அவரது உடலில் கொடிய விஷமான பொலோனியம் இருந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அராபத்தின் மனைவி சுஹா கொடுத்த புகாரின்பேரில் பிரான்ஸ் அதிகாரிகள் அராபத் மரணம் குறித்த விசாரணையை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கினர். விசாரணையை மேற்கொள்ள ஏதுவாக பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட அராபத்தின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. அவரது கல்லறையை உடைத்து உடலைத் தோண்டி எடுக்கும் பணி நேற்று துவங்கியது. இந்த பணி முடிய 15 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த விசாரணை தொடர்பாக வரும் 26ம் தேதி பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நிபுணர்கள் பாலஸ்தீனம் வருகிறார்கள் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி: tamil.oneindia.in

No comments: